Wednesday, August 15, 2007

காந்தி - ஒரு நிஜ அனுபவம்

வெற்றிகரமாக ப்ளாக் எழுதி ஒரு வருடமாச்சு...அட்லீஸ்ட் ஒரு வருடமாச்சும் இடைவெளி விட்டால்தான் மணிரத்னம் படம் போல ஒரு எதிர்பார்ப்பு இருக்குமென்று..( இந்த பில்டபுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...)..இதை கடந்த 6 மாதமாக எழுத நினைத்து...இப்போதுதான் ப்ளாகுகிறேன்.

திடீரென எந்த முனி பிடித்ததோ தெரியவில்லை...பைத்தியம் பிடித்து கொண்டது எனக்கு...அது மகாத்மா காந்தி பைத்தியம்...(லகே ரஹோ முன்னாபாய்-கு முன்பே)...ஊரிலிருந்து வந்த மச்சினியிடம் சத்தியசோதனை வாங்கி வர செய்து...இரண்டு வார மூச்சில் படித்து முடித்தேன்...அதன் பிறகு ரொம்ப நாட்கள் கழித்து காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென போது ஒரு பல்பு எரிந்தது..."மஹாத்மாவின் கொள்கையை நம் வாழ்வில் கடைபிடித்தால் என்ன...? " - தடாரென்று அந்நொடியே கடைபிடிக்க தீர்மானித்தேன்...

இனி அந்த அனுபவங்கள்...

காலையில் ஆபீஸ் சென்றதும்...திடீரென வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டேன்...(?).."என்ன ஆச்சு இவனுக்கு ?" என சந்தேகம் வருவதற்கு முன்பு என் நண்பனிடம் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்துவிட்டேன்....

மதியம் ஒரு பர்சனல் வேலைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து முடித்தபோதுதான் காந்தி வந்தார்..."தம்பி பர்சனல் வேலைக்கு பிரிண்ட் அவுட் எடுப்பதே தவறு...அப்படியே எடுத்தாலும், மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு எடுப்பதுதானே முறை.."....காந்தியின் குரல் ஓட....இது என்னடா முதல் நாளே வந்த சோதனை என்று மனசாட்சியிடம் சண்டை போட்டு....மேனஜருக்கு ஒரு ஈமெயில் போட்டேன்...இந்த மாதிரி...

" இந்த ஈமெயில் ஒரு குப்பையாக தோன்றலாம்...வேறுவழியில்லை..இன்று காலை பர்சனல் வேலைக்காக இரண்டு பிரிண்ட் அவுட் எடுத்தேன்...அதை உங்களிடம் தெரிவிக்கவே இம்மெயில்....வேறொன்றும் இல்லை...காந்தியின் கொள்கையை கடைபிடிக்க ஒரு முயற்சி...அதனால்தான்...ஆகையால்...அவ்வப்போது இந்த மாதிரி ஈமெயில் வேண்டுமா...அல்லது இனி வருபவைக்கும் சேர்த்து இப்போதே அனுமதி வழங்கிவிடுகிறீர்களா என்பதை உங்கள் பரிசீலனைக்கே விட்டு விடுகிறேன்..."

"அப்பா..சாமி...என்னை இந்த மாதிரி படுத்தாமல்...என்ன வேண்டுமானாலும் செய்துகொள்..." - என பதில் வந்தது...

பிறகு மதியம் சாப்பிட சென்றபோது...கேண்டீனில் உள்ள ஸ்பூனை எடுக்கையில் மீண்டும் காந்தி..." தம்பி கேண்டீனில் உள்ளது உன்னுடைய சொந்த உபயோகத்திற்காக அல்ல..." - இது என்ன சத்திய சோதனை என்று ஒருவாராக சமாளித்து முடித்தேன்....

மிகுந்த கவனத்தோடு கவனித்தபோதுதான் தெரிந்தது...ஒரு நாளைக்கு எத்தனை விதமான வெள்ளை பொய்கள் சொல்கிறோம் என தெரிந்தது...

- " ஸாரி மாப்ள....கொஞ்சம் பிஸியா இருந்தேன் அதான் போன் பண்ண முடியலை..."
- தேவையே இல்லாமல் யாரைப் பற்றியேனும் குறை சொல்லுவது...
- " அடடா...ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி கேட்டிருந்தா பைசா குடுத்திருப்பேனே..."

சில சமயம் பொய் சொல்லாமல் இருப்பதை விட கடினமாக இருந்தது....உண்மையை மறைக்கலாமா வேண்டாமா என்று குழம்பி நின்றதுதான்..உதாரணத்திற்கு....அலுவலகத்தில் ஒரு நண்பன் அவன் மனைவிக்கு வேலை வாங்கி தர உதவி கேட்டு, இதை யாரிடமும் சொல்ல கூடாதென்றான்...அதை தூரத்திலிருந்து பார்த்த இன்னோரு நண்பன் என்ன விஷயமென்று கேட்க....என்ன செய்வது என்று விழிக்க ஆரம்பித்தேன்...சத்தியமாக இந்த மாதிரி இடத்தில் காந்தி தேவைப்பட்டார்...

இதற்கிடையில்...ஒரு பயோடேட்டா தயார் செய்து கொடுக்கும் கட்டாயம் எற்பட்டது...இது ஒரு பெரிய விஷயமா என்பீர்கள்...ஆனால் இது "fake resume"...இதில் எப்படி சமாளிப்பது என தெரியாமல்...ஒரு சிறுகுறிப்பு மட்டும் அவர்களுக்கு கொடுத்தேன்...அவர்களாகவே செய்யட்டுமே என்று...இரண்டு நாள் கழித்துதான் அதுவும் கூட தவறு என நிறுத்திக்கொண்டேன்...மற்றபடி, கொஞ்சம் அதிகம் கஷ்டப்பட்டது மட்டன், சிக்கன் வகையறாக்களை தவிர்த்ததுதான்...வீட்டில் அட்லீஸ்ட் மீனாவது சாப்பிடுங்கள் என்று சபலப்படுத்தியும் அடக்கிக்கொண்டேன்...பிறகு நெட்டில் படம் பார்ப்பது, piracy பாடல்கள் என்று எதை தொட்டலும் தவறாகவே இருந்தது..

இரண்டு நாள் கழித்து...இந்தியாவிற்கு voip-phone அனுப்பி இருந்தேன்...விதிகளின்படி அதை அனுப்புவது தவறு கிடையாது...ஆனால் எதாவது கோளாறு என்றால் அந்த நிறுவனத்திடமிருந்து உதவி கிடையாது....இந்நிலையில், நான் நினைத்தது போலவே அது வேலை செய்யவில்லை...கஸ்டமர் சர்வீஸை கூப்பிட்டேன்...அந்த போன் அமெரிக்காவில் உள்ளது என்றால் டுபாக்கூர் விட்டிருந்தால் கண்டிப்பாக சரி செய்துவிடுவார்கள்....நான் பளிச்சென்று உண்மையை கூறினேன்...

"தற்சமயம் இது இந்தியாவில் வேலை செய்யவில்லை...."
உடனே பளீர் பதில்..." மன்னிக்கவும்...உதவி இல்லை..."
"நன்றி.." போனை வைத்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டேன்...

கொஞ்ச நேரத்திற்கு பிறகுதான் மனதில் பட்ட ஒரு மாறுதலை கவனித்தேன்...அதாவது சுத்தாமாக தோற்றுப் போன உணர்வே இல்லாமல் தெள்ளத் தெளிவாக இருந்தது மனது...நன்றாக உற்று கவனித்த போதுதான் தெரிந்தது...இதுவே மற்ற சமயமாக இருந்திருந்தால் சமயோஜிதமாக ஒரு பொய்யை சொல்லி சமாளித்து ...அது வெற்றி அடைந்ததும் "பாத்தியா என்னோட திறமையை" என்று ஒரு கர்வம் மேலோங்கி இருக்கும்...இதில் வெற்றி கொடுத்த மனநிறைவை விட தோல்வி கொடுத்த மனநிறைவு அதிகமாக இருந்தது...

மெல்ல மெல்ல பொய் பேசுவதற்கான சந்தர்பங்கள் அதுவாகவே குறைந்தது.... விழிப்புணர்வோடு இருந்ததால் அனுபவங்களும் குறைந்தது....வெற்றிகரமாக கிட்டத்தட்ட இரண்டு மாதம் ( புலால் உண்பது மட்டும் ஒரு மாதத்திலேயே கட் ) கடைபிடித்ததில் நான் தெரிந்து கொண்டது ஒரு பெரிய்ய்ய்ய்யயயா உண்மை...

"நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே..."

இந்த விரதத்தில் எனக்கு முழு திருப்தி கிடையாது....உதாரணத்திற்கு, பிரிண்ட் அவுட் மேட்டரில் அதுவே உண்மையை சொன்னால் வேலை போயிருக்கும் என்று சொல்லியிருந்தால் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகம்தான்...அதுவே காந்தி..வக்கீல் தொழிலுக்கு முக்கியத் தேவையான பொய்யையே சொல்லமல் வாழ்ந்த மனிதர்..

சத்தியசோதனையில் கடைபிடித்தபோது..."ஒரு அளவிற்கு" நேர்மையாக இருக்கும் நாம்..."முழுமையாக" நேர்மையாக இருக்கிறோமா என்ற என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியின் படி பதில் கூற முயலுங்களேன்...

1. உங்களிடம் இருக்கும் ஐ-பாட், கம்ப்யூட்டர், சிடி, டிவிடி, மற்றும் இதர வகையறாக்களில் உள்ள சாப்ட்வேர், பாடல்கள் மற்றும் படங்களில் எத்தனை நிஜமாக துட்டு கொடுத்து வாங்கியது...என் கணக்கு படி 90%-கு மேல் "சுட்டது" அல்லது "சுட்டதில் சுட்டது"-தான்....இதில் உள்ள பாடல்களை ரசிக்கும்போது ஒரு நொடியாவது மனசாட்சி குத்தியிருக்கிறதா...? விதவிதமாக hack செய்து புளங்காகிதம் அடைந்திருக்கிறோமா இல்லையா ? அது தவறு என்பதே மறந்து போய்...அது ஒரு கிட்டத்தட்ட "நேர்மையான" விஷயமாகவே அல்லவா பழகி வைத்திருக்கிறோம்...?

2. நேர்மையின் விளிம்பு பாக்கெட்டின் கனத்தை பொறுத்து என்கிறேன்... அதாவது...ஓவர்ஸ்பீடில் வண்டி ஓட்டி, போலீஸ் பிடித்து - "அபராதம் என்றால் 300/- ரூபாய், அதே "சம்திங்" என்றால் 100/- என கூறினால்...முன்னூறை கொடுத்து காலரை தூக்கி "நேர்மை" என கர்வம் கொள்வோம்...அதே போலீஸ்...அபராதம் என்றால் 15000/- , "சம்திங்" என்றால் 100/- என கூறினால்...?

3. "விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்களை இடிப்பு" - செய்தியை படித்து ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் என்று பாராட்டும் நாம்...அதில் நம்முடைய வீடும் இருந்தால் - சுயநலமாக மாறமாட்டோமா என்ன ?

4. நம்மில் எத்தனை பேர் புது வீடோ மனையோ வாங்கும்போது ஒழுங்கான ஸ்டாம்ப் டியூட்டி கட்டியிருக்கிறோம்...?

5. விடுமுறைக்கு இந்தியா செல்லும் NRI-ஸ்...$400-க்கு மேல் உள்ள பொருட்களுக்கு ஒழுங்காக டியூட்டி கட்டியிருக்கிறோமா...ஆனால், ஏர்போர்டிலிருந்து கூலி நூறு ரூபாய் கேட்டால் மட்டும்..."சே...இந்தியாவுல எங்க பாத்தாலும் லஞ்சம்" என புலம்புவோம்...

இது போல இன்னும் எத்தனையோ...

ஆனால்...எது எப்படியோ...மீண்டும் சத்தியசோதனையில் மேலும் சில கொள்கைகளுடன் - சில காலம் இறங்கலாம் என்று உத்தேசம்...

12 comments:

Anonymous said...

எல்லாரும் இந்த மாதிரி மாறினா எப்படி இருக்கும்..

குறைந்த பட்சம் இந்த மாதிரி யோசிக்க ஆரம்பிச்சா கூட போதும்...

ரொம்ப நல்ல ப்ளாக் கோபி..

- சன்முகநாதன் சீனிவாசன்

Anitha(Nikki's mom) said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல பதிவு. Piracy பத்தி நான் கூட நினைப்பேன். Whenever I read online books, see online movies, download mp3 songs. Books மட்டும் follow பண்றேன். படங்கள் எல்லாம் பாக்கறதேயில்லை குட்டிப் பையன் வந்த அப்புறம். Office time'la over'a browse பண்ணா கொஞ்சம் guilty'a இருக்கும். Follow பண்ண வாழ்க்கைத் துணையோட ஒத்துழைப்பும் ரொம்ப தேவை. 1 வருஷம் இருந்து பழகிட்டா தானா வந்துடும்னு தோணுது. நல்ல முயற்சி கோபி. Practical life'la எந்த அளவு workout ஆகுதுனு சொல்லுங்க.

victor said...
This comment has been removed by the author.
victor said...

loser,,,

8~)

Anonymous said...

கோபி, எல்லா இடங்களிலும் உண்மையா இருக்கிறது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் னு தெரியல.
ஆனா நம்மால் முடிந்த அளவுக்கு இதை கடைப்பிடிக்கலாம். Hats off to you!ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்கு உண்டான எழுத்து நடை உன்னோட கட்டுரை ல இருக்கு. சுஜாதா வோட கட்டுரைகளில் தெரிகிற அந்த நக்கல், குறும்பு உன்னோட கட்டுரை லயும் இருக்கு. அது ரசிக்கும்படியா இருக்கு. உன்னோட முந்திய கட்டுரை க்கு நம்ம பாரதி comment ல "நீளம் கொஞ்சம் அதிகம்" னு சொன்ன குறை இந்த கட்டுரை ல நிவர்த்தி செய்யப்பட்டிருக்கு னு நினைக்கிறேன்.

-சீனிவாசன் (91EL29)

மங்கை said...

இன்னைக்கு தான் உங்க பிளாக் பார்க்கிறேன்....சில காரணங்களுக்காக சில பொய்களை சொல்லத்தான் வேண்டி இருக்கிறது..நம் நலமும்..பிறர் நலமும் கருதி...may these are all justifications..

memory triggers பதிவுல போட்ட பின்னூட்டத்திற்கு நன்றி...உங்க மெமரி ட்ரிக்கர்ஸ் பதிவும் எதிர்ப்பாக்கிறேன்

கொங்கு கோபி said...

சன்முகநாதன் - கரக்ட்..நாம யோசிக்க ஆரம்பிச்சா கூட போதும்...ஆனா பண்ண மாட்டேங்கறோமே...

அனிதா: நன்றி..ஆமா இதுக்கு எதுக்குங்க வாழ்க்கை துணையோட ஒத்துழைப்பு...நிஜமாவே புரியலை...

விக்டர்: யாரு நானா ?

சீனி: நன்றி...எல்லாரும் நடைமுறைக்கு சாத்தியாமான்னே கேட்டுட்டு இருக்கோம்...mp3 songs சுடுவதை நிறுத்துவது சாத்தியமில்லையா என்ன ?

மங்கை: வந்தமைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க...மெமரி ட்ரிக்கர்ஸ் சீக்கிறமே போடறேங்க...

Anonymous said...

dei romba santosama irukku da..nalla muyarchi...but real life la 100% gandhi maathiri iruppathu konjam kastam thaan....but adarkana muyarchi edupathe follow pannuvatharku samam da....I really appreciate your thoughts.....

anbudan
anna

Anonymous said...

Gopi.. good thinking , superb .. what you said is 100% , thanks will try to follow gandhi. will start with small thing like using office printout.

please update your process.

Anonymous said...

சத்தியசோதனை என்று தேடியதில் உங்கள் பிளாக் கிடைத்தது. ஆரம்பத்தில் மகாத்மாவை கிண்டல் செய்யப்போகீறீர்கள் என்று நினைத்து சற்று கோபமாகவேதான் படிக்கத்தொடங்கினேன்.ஆனால் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

மனிதர்கள் மகாத்மா விட்ட இடத்தில் தொடங்கினால் உலகம் ஆன்மீகத்திலும் அமைதியிலும் நிறைந்து காணப்படும்.அந்த ஜீவன் ஒரு அவதாரம்,அது போதித்தது மதம் என்ற அடையாளம் கொடுக்கப்படாததால் தலைவர் என்கிற சிறிய வட்டத்தில் இருக்கிறது.
உண்மையில் அவர் செய்த அதிசயங்களை ஒரு க்டவுள் கூட செய்யவில்லை.

கொங்கு கோபி said...

இபு மற்றும் ரமாசெல்வி-க்கு நன்றி...நடுவில் விட்டிருந்த காந்தி உங்களைப் போல நண்பர்களின் இடுகையால் மீண்டும் உயிர் பெருகிறது...மீண்டும் என் வாழ்க்கையில் போட்டு பார்க்கிறேன்...அனுபவத்தை எழுதுகிறேன்..

Aarthi said...

super gopi...nalla irunthathu intha blog...sindhika vachiduchu....keep the good work going..