Wednesday, August 15, 2007

என் முதல் 'அந்த' அனுபவம்...

என் பெயர் : கோபிநாத்.
வயது : அப்போது பத்து.
ஊர் : ஈரோடு.
வகுப்பு : 4-ஆம் வகுப்பு.
இடம் : வீ.சத்திரத்தில் ஒரு பள்ளி.

என்  டீச்சர் பெயர் மாலதி.

ஒரு நாள் இளங்காலை. வழக்கம்போல் கிளாஸில் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் என் வாழ்க்கையில் அந்த புயல் ஆரம்பித்தது. ஆம்...அன்றுதான் மாலதி டீச்சர் முதல் நாள். லேசான புள்ளி போட்ட சந்தன சேலை... சன்னமான தங்க வளையல், பெரிய டாலர் வைத்த செயின்.. நல்ல உயரம், அதற்கேற்ற உடம்பு...மொத்தத்தில் "தமிழ் முரசு" ஸ்லோகன் போல் இருந்தார் (சும்மா நச்சுனு).

எங்கள் வகுப்பில் மொத்தம் இரண்டு பேர். நான், புதிதாக வந்துள்ள ஜகனாதன் (கிராமத்து பையன் -ஆகையால் அவனை சுலபமாக முந்தி விடலாம் என்ற மெத்தனம்)...நான் படிக்கும் வகுப்புதான் உயர்ந்த பட்ச வகுப்பு. நாங்கள் பாஸாகி செல்ல செல்ல வகுப்பும் உயர்ந்துகொண்டே செல்லும். எங்கள் ஜூனியர்களும் (மூனாப்பு - 5 பேர்) எங்களோடுதான் வகுப்பை பகிர்ந்துகொள்வார்கள் (பாடத்தை அல்ல). நீங்கள் மேலும் அதிர்ச்சி ஆவும் முன்...எனது ஒரே கனவு இன்ஜினியர் ஆவது ( "ஏங்க நம்ம பையன் என்னவா வருவான்"? - என்ற என் அம்மாவின் கேள்விக்கு "இவன் கில்லி ஆடறதை பார்த்தா இன்ஜினியர்தான் ஆவான் போல இருக்கு" - என்ற என் அப்பா பதிலின் பாதிப்பு ).

 
மாலதி டீச்சர் யார் கிளாசிற்கு வருவாரென்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க...எங்களுக்கு 'அடித்தது' அதிர்ஷ்டம். அது மட்டுமின்றி வந்த நாள் முதல் எங்களை குடைந்து கொண்டிருந்த ஒரே கேள்வி "இவங்க அடிக்கற டீச்சரா. அடிக்காத டீச்சரா?". அதற்கும் கூடிய விரைவில் பதில் கிடைத்தது (நீங்களே போக போக தெரிந்து கொள்வீர்கள்). ஒரு நாள் போர்டில் சாக்பீஸால் ஒரு கொக்கி போட்டு, அதனுள் ஒரு நம்பரை எழுதி, வெளியே ஒரு நம்பரை எழுதி இதே போல் சில கொக்கிகளில் சில நம்பர்கள்...என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்...திரும்பி எங்களை பார்த்து "இதையெல்லாம் ஸால்வ் பண்ணி கொண்டு வாங்க" என்று சொல்ல.... நான்.. யெஸ்... நீங்கள் நினைப்பது போலவே fake resume அடித்து இன்டெர்வியூ சென்றவனை போல விழித்தேன்... திரும்பி நைஸாக கிராமத்தானும் முழிப்பான் என்று அல்ப சந்தோஷத்தை எதிர்பார்த்து பார்க்க... அவன் கிடு கிடுவென எதையோ எழுதிக்கொண்டிருந்தான். "இதென்ன கலாட்டா" என்று சந்தேகத்துடன் அவன் நோட்டில் பார்வையை செலுத்த... உள்ளே கொக்கிக்குள் இருந்த நம்பரை அதன் கீழே எழுதி
ஒரு கோடு போட்டு பூஜியம் போட்டு என்னவோ செய்து கொண்டிருந்தான். அதாவது வகுத்தல்
இந்த மாதிரி



"தெரியலைன்னா தெரியலைனு சொல்ல வேண்டியதுதானே...கண்டதை எதுக்குடா கிறுக்கி கொண்டு வந்திருக்க முண்டம்" என்று அவன் மொட்டை மண்டையில் குட்டு விழும் என்று கனவு கண்டிருந்த எனக்கு பேரிடி... "வெரிகுட்...அப்படித்தான்" என்று பாராட்டு மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்து திரும்பி வந்தவனை பார்த்த எனக்கு ஜன்னி வந்தது... அதுவரை அவன் மேல் இருந்த "கிராமத்தான்" என்ற இமஜ் விலகி கொஞ்சம் "சரக்கு உள்ள பையன்" இமஜ் வந்தது...சரசரவென்று அப்போதைக்கு காப்பி அடித்து சமாளித்தேன்.


கொஞ்ச நாளில் டீச்சர்-கு என்னுடைய சுயரூபம் தெரிந்து போனது.. ("மண்டைல என்ன களிமண்ணா இருக்கு...") அதன் பிறகு டீச்சர்-ன் சுயரூபம் எனக்கு தெரிய ஆரம்பித்தது.. தினமும் தவறாமல் பாலபிஷேகம், தேனபிஷேகம் நடந்தது. (பால் = முட்டி போடல், தேன் = பிரம்படி.) தினமும் அடி... பின்னி பெடலெடுத்து... துவைத்து காயபோட்டு (இதன் தொடர்சியாக தற்கொலை முயற்சி எல்லாம் அடுத்த ப்லாக்-ல்) இப்படியாக நாட்கள் நரகமாக கடந்து, இரண்டு வருடம் சென்றிருந்தது. இதில் கொடுமையோ கொடுமை என்னவென்றால், இன்னமும் வகுத்தல் கணக்கு என்றால் என்னவென்று தெரியாத மடசாம்பிராணியாக நான் இருந்ததுதான்...டீச்சர்-ம் ஒரு நாள் கூட ஏன் கணக்கு வரவில்லை என்ற காரணத்தை
கேட்கவில்லை...சொல்ல எனக்கும் தைரியம் இல்லை என்று நீங்களே இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்...


ஒரு வழியாக ஐந்தாம் வகுப்பு பாஸாகியிருந்தேன்.. (?) இப்போதும் என் வகுப்பில் நான் மற்றும் ஜகன்.. அவ்வளவே. அப்போது புதிதாக ஒருவன் சேர்ந்தான். பெயர் : பாரத். மெட்ராஸில் இருந்து வருவதாக சொன்னார்கள் (அப்போது சென்னை இல்லை). ஐயர் பையன். வெள்ளையாக இருந்தான். செருப்பிற்க்கு பாலிஷ் எல்லாம் போட்டிருந்தான். எனக்கு அவனை பார்த்தது முதல் வயிற்றை பிசைந்து கொண்டிருந்த சமாச்சாரம்.. "இவன் எப்படி படிப்புல.. நம்மை(?) விட ஜாஸ்தியா? "...கிளாஸ் ஆரம்பிக்க... என் ஆசையில் மண் அள்ளி போட்டான்...கையெழுத்து மணிமணியாக முத்து போல் எழுதினான்.. (சிறு வயதில் மற்ற மாணவனின் படிப்பை கணக்கிட கையெழுத்து உதவுகிறது என்பது எவ்வளவு ஆச்சரியம்..) உள்ள மூவரில் கடைசியாக நான் தள்ளப்பட்டதை உணர்ந்து நொந்து போனேன்..


நான் எதிர்பார்த்தது போலவே கொஞ்ச நாளிலேயே பாரத் எல்லா டீச்சர்-க்கும் பெட் ஆகி என்னுடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டிருந்தான். அவன் முதல் ராங்க்... ஜகன் இரண்டாவது... நான் கணக்கில் போன மாதத்தைவிட இந்த மாதம் மூன்று மார்க் அதிகம் ( போன மாதம் பத்து மார்க்...) நான் மட்டும் கம்பெனியே இல்லாமல் வெளியே முட்டி போட்டு கொண்டிருப்பேன். என் அப்பா என்னை தினமும் ஸ்கூலில் விடும்போது பேந்த பேந்த விழித்துக்கொண்டே ப்ரொக்ரெஸ் கார்டை எடுத்து நீட்ட "எப்போத்தான்டா ராங்க் வாங்க போற...இரு இரு உங்காயாகிட்ட (அம்மா) சொல்றேன் " என கூற...சாயங்காலம் வரவே கூடாதென்று இருக்கும்.
 
இப்படியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில்...நீங்கள் எதிர்பார்க்கும் அந்த நாள் வந்தது...

அன்று ஏதோ ஒரு பரீட்சை. பரீட்சை தொடங்க பத்து நிமிடம் இருக்கும்போதுதான் அதை கவனித்தேன். பாரத் படித்த புக்கை மூடி பைக்குள் வைக்காமல், அப்படியே திறந்த நிலையில் பைக்குள் வைத்தான்... நானும் ஜகனும் குழப்பத்துடன் அவனை பார்க்க "டேய் யார்கிட்டயும் சொல்லாதீங்க... நீங்களும் இப்படியே வைத்து எழுதுங்க... " என்றான்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஆனால், ஏதோ தப்பு காரியம் பண்ணுகிறான் என்று மட்டும் தெரிந்தது. நாங்கள் கோரஸாக "செத்தாலும் மாட்டோம்டா சாமி... " என்று சொல்லிவிட்டு கடவுளே இன்று அவன் பிட் அடிப்பதை டீச்சர் பார்க்க வேண்டும் என்று கண்ட காலை கனவு பலிக்கவில்லை...பாரத் நமுட்டு சிரிப்புடன் அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தான்...


அடுத்த நாள்...எப்படியாவது ப்ரொக்ரெஸ் கார்டில் 'நில் ரேங்க்' வார்த்தையை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன்... "முக்கியமான ரெண்டு கேள்வியை மட்டும் இதை பார்த்து எழுதினா போதும்...அப்புறம் மீதி எல்லாம் ஈஸி.." என்ற பாரத்தின் தொழில் ரகசியத்தை நம்பிதயாரானேன் (நிஜமாவே அவன் ப்ரில்லியன்ட்...ஏன் காப்பி அடித்தான் என்று இன்றும் புரியவில்லை ) ஜகனையும் ஜோதியில் ஐக்கியமாக சொல்ல.. அவன் பெரிய ஒழுக்கன் போல் மறுத்துவிட்டான்...எப்படியோ எங்களை மாட்டி விடாமல் இருந்தால் சரியென தயாரானோம்.

பரீட்சை ஆரம்பமானது... சிறிது நேரத்தில் டீச்சர் எங்கோ பிரேக்-கில் செல்ல, இதுதான்டா பிட் என்று பைக்குள் விரித்த புக்கை பார்த்து நைஸாக எழுத ஆரம்பித்தான் பாரத். எனக்கு இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தது. இரண்டு மூன்று மார்க் வாங்கினாலும் ஏதோ ஹமாம் சோப்பு போட்டு குளித்ததால் நேர்மையாக இருந்தேன்... இப்போது அதுவும் கோவிந்தாவா...என்று வியர்த்து விறுவிறுத்தபடியே எந்த விரலால் எதை திறந்து எப்படி அடிப்பது என்ற டெக்னிக் வராமல் விழி பிதுங்கியது... ஒரு பத்து நிமிடம் நான் இந்த ஆராய்ச்சியில் இருக்க போன டீச்சர் திரும்பி விட்டார்கள். போச்சுடா என்று புரியாத கேள்வியை பார்த்து படு பயங்கரமாக யோசனை செய்து கொண்டிருந்தேன் (எப்ப அவங்களுக்கு 2 பாத்ரூம் வந்து கிளம்புவாங்க ? ) பாரத் கர்மமே கண்ணாயிருந்தான். கொஞ்ச நேரத்தில் டீச்சர் உற்று கவனிப்பது போல் தோன்றவே பாரத்-ஐ பார்த்தேன்... அய்யோ அவன் அப்போதும் புக்கை பார்த்து எழுதிக்கொண்டிருந்தான்... திரும்பி டீச்சர்-ஸை பார்க்க... அவர்கள் புருவம் சுருக்கி பார்த்து மெல்ல எழுந்தார்கள்...எனக்கு அடிவயற்றை கலக்கி நம்பர் 2 வரும் போல் இருந்தது..

எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது... மெல்ல டீச்சர் பாரத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க...


"எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை... "
"எது நடக்கபோகிறதோ அதுவும் நன்றாக நடக்க போவதில்லை... "

"ஏய் பாரத்...என்ன பண்ற அங்க...?" என்று வேகமாக பக்கத்தில் வர, எங்கள் அனைவருக்கும் விக் பக் என்றது... நெருங்கி அவன் நோட்டை பிடுங்கி, வைத்து எழுதிக்கொண்டிருந்த பேக்கை விரித்து உள்ளே பார்க்க உள்ளே எங்களின் "தர்ம-அடி" விரித்த நிலையில் இருந்தது... கண்கள் சிவக்க...நாசி துடிக்க... டீச்சர்-ன் மூளைக்குள் ஏறுவதற்குள்...யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவத்தை நிகழ்த்தினான் பாரத்...

"ஆ...ஆ...அம்மா ஐயோ... " - நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அட்டகாசமாய் கீழே சரிந்தான்... எல்லோரும் பதறி எழுந்து "ஏய் என்ன ஆச்சு ...இங்க பாரு எழுந்திரு.." என்று பதற... அவன் "அம்மா வலிக்குது..." என்று கதறினான்... (டேய் கைகாரா 10 வயசுல நெஞ்சு வலியா..? ) பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ள யாரோ தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க... கொஞ்சம் ஆசுவாசபடுத்தி ரிலாக்ஸ் செய்து... அதற்குள் ஹெச்.எம் அங்கு வந்து "lets allow him to take some rest !!" என்று கூறி... பரீட்சை முடிந்த ஒரு பையனை பாரத் வீட்டில் விடச்சொன்னார்கள்... அவனும் சமத்தாக நெஞ்சை பிடித்துகொண்டு வீட்டிற்கு
கிளம்பினான்..

அவனை விட்ட சனி என்னை பிடித்துக்கொண்டது...டீச்சர் விரித்த புக்கையும் அந்த பையையும் பார்த்துவிட்டு...

"என்னடா ரொம்ப நாளா இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கானா..?"

"எ...எ...எந்த மாதிரிங்..டீச்சர்..?"..
 
" ம்..ராஸ்கல்...பிட் அடிச்சிட்டு இருந்திருக்கான்...என்ன நீங்களும் இந்த மாதிரி திருட்டு வேலை பண்ணிட்டு இருக்கீங்களா..?" - என்று என்னருகில் வந்து என் பையை எடுக்க...கடவுளே...எனக்கும் தலை சுற்றக்கூடாதா என்றிறுந்தது...
உள்ளே அடுத்த தர்ம்-அடி உறங்கிக்கொண்டிருக்க...." ஓ...காட்..." உடனே...கண்கள் சிவந்து ஜகனின் பையை தேட...அவன் உடனே சமர்த்தாக..."நானில்லை டீச்சர்...இவங்கதான் " என்று...சிவகாசி வெடியை கிள்ளி போட்டான்...

என் காதை திருகி..." ஹெச்.எம் ரூமுக்கு வா...நீயும் வாடா" என்று ஜகனையும் இழுத்து செல்லும் வழியில்..." ஸ்மிதீ ( சுமதி)...ஒரு நிமிஷம் உள்ள வா" என்று தன் தோழியையும் துணைக்கு அழைத்து கொண்டார்...

"ராஸ்கல்ஸ்...என்ன காரியம் பண்ணிட்டு இருந்திருக்கானுக தெரியுமா...பிட்..அடிச்சிட்டு இருந்திருக்கானுக.." என்ற பொளெரென்று கன்னத்தில் விழுந்தது...ஹெச்.எம் இந்த அளவுக்கு அராஜகத்தில் இறங்க தெரியாத ஒரு ஆங்கிலோ இந்தியன்.

" I cant believe it gopi...I didnt expect this from you...You know how much your mother struggles for you..Is it true..?"
 
நான் வழிந்த கண்ணீருடன்..." இல்லீங் டீச்சர்...படிச்சிட்டு அப்படியே மறந்து பைக்குள்ள வெச்சிட்டேன்..."- முடிக்குமுன்... பளார்..." பொய் பேசாத.."...அடுத்த கட்ட விசாரனை ஜகனிடம் ஆரம்பித்தது...அவன் உடனே அரிச்சந்திரனின் இரண்டாம் அவதாரம் எடுத்தான்...அத்தனையும் சொன்னவ்ன்...நான் அன்றுதான் debut என்பதை வசதியாக
மறந்துவிட்டதைப் போல் நடித்தான்...இந்த சைக்கிள் கேப்பில்...பிரேக்கில் வந்த வேறொரு டீச்சர் சங்கதி கேட்டு..." ஒஹ்...காட்..ரிடிகுல்ஸ்" என கண்ணத்தில் இலவச இணைப்பு கிடைத்தது...

" அந்த பாரத் பய நடிச்சிருக்கான்னு நினைக்கிறேன்...( இன்னுமா உங்களுக்கு புரியவில்லை?)..எப்படி 1st ரேங்க் வாங்கறான்னு இப்பத்தான் புரியுது...( அப்ப..ரேங்கே வாங்காத நான்..?) .." என்ற யூகங்களுக்கிடையில்...பிபிசி-யில் நியுஸ் பரவி ஒரு கும்பலே சேர்ந்து அவ்வை சண்முகி டெல்லி கணெஷ் போல் தெளிய வைத்து தெளிய வைத்து துவைத்து கொண்டிருந்தனர்...அதற்கு, ஸ்கேல்...குண்டாந்தடி என்று பல் உபகரணங்கள் உதவி புரிந்தன...

இதற்கிடையில் காதில் விழுந்த ஒரு சம்பாஷனை அவர்கள் காலை தேட வைத்தது...("I think we may have to inform his parents ")...வேறு வழியே இல்லை காலில் விழுந்துவிட வேண்டியதுதான்...பின்னே என் அம்மாவின் "லக்கலக்க" டான்ஸை நினைத்துப் பார்க்காமலே வடிவேலு போல நடுக்கமெடுத்தது..

" டீச்சர்..டீச்சர்...எங்க வீட்டுல சொல்லிடாதீங்க...எல்லாம் பாரத்தான்...அவந்தான் என்னை கெடுத்துட்டான்...நான் மாட்டேன்னுதான் சொன்னேன்...அவந்தான் விடலை...பாருங்களேன்..ஒரு தடவை என்னோட தொடையைகூட பார்த்து ..உன்னோட தொடை 'சில்க்' தொடை மாதிரி இருக்குன்னு சொன்னான்...அவ்ளோ கெட்டவன்..." - என்று தடாலென்று டாபிக்கை மாற்றிப் போட்டேன்...

நிலைகுலைந்து போனார்கள்...

 
" கமான்...கம் அகெய்ன்.."...

" 'சில்க்' ஸ்மிதா தொடை மாதிரி..." - ஒரு வினாடி என் இடுப்புக்கு கீழே பார்வையை படரவிட்டு.." நான்சென்ஸ்...என்னென்ன குப்பையை பேசிட்டு இருந்திருக்கானுக....ராஸ்கல்ஸ்..இடியட்ஸ்..."..கடுப்பின் உச்சத்தில் இரண்டு ஸ்கேலை திருப்பி வைத்து 10 நிமிடம் பிடிக்க...Breathless...


ஒரு வழியாக மதியம் லன்ச் பிரேக் வந்தது...எல்லோரும் தத்தமது இழந்த சக்தியை மீட்டு திரும்ப வந்தனர்...தேமே என்று இருந்த எனக்கு சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது...டீச்சர் என் காதை பிடித்து இழுத்துக் கொண்டு ஒவ்வொரு க்ளாஸாக செல்ல ஆரம்பித்தார்...எல்லோரிடமும் என்னை காட்டி..."லிசன்.....இவன் என்ன பண்ணிருக்கான் தெரியுமா..." என்று ஆரம்பித்து...என் வீர பிரதாபங்களை சொல்லி முடித்து...

 " நீங்க யாராச்சும் இந்த மாதிரி பண்ணுவீங்களா..?"
 
" நோ..நோ..நோ..." - என்று கோரஸ் பாடி அனைவரும் உத்தமன்/மி ஆனார்கள்...இதில் ஒன்றாம் வகுப்பு சிறார்கள் "பிட்டுன்னா ?" என்று கேட்டதுதான் உச்சகட்டம்...

மீதி நாள் முழுவதும் அவமானப்படலத்திலேயே சென்றது..."நாளைக்கு வர்றப்ப உங்கப்பாவையும் கூட்டிட்டு வா" என்று சொல்லமல் இருக்க வேண்டுமென்ற என் வேண்டுதல் பலித்தது...( பலித்த முதல் வேண்டுதல்)...சாயங்காலம் வீட்டில் ...எதிலுமே மனது ஒட்டவில்லை...அடுத்த நாளை நினைத்து நினைத்து காய்ச்சல் வரும் போல் இருந்த்தது...

அடுத்த நாள்....
 
இதற்கு மேல் வைக்க முடியாது என்ற அளவுக்கு முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு...பாடி லாங்வேஜையும் அதற்கு தகுந்தாற் போல் மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டிருந்தேன்...பாரத் நெற்றியில் திருநீறுடன்... அவன் தாத்தா டிராப் செய்து போனார்..

பெல் அடித்து...ப்ரேயர் முடிந்து..க்ளாஸ் வந்தமர்ந்து 10 நிமிடம்..

"நீங்க மூணு பேரும் உள்ள வாங்க " - டீச்சர் அழைப்பு விடுக்க...எனக்கு லேசான குதூகலம்..நான் செய்த வேலைக்கு நேற்றே வட்டியும் முதலுமாக வாங்கி விட்டேன்..இன்று பாரத்-துக்கு நடக்கும் பாலபிஷேகத்தை கண்குளிர பார்க்கலாம்.

ஸ்மித்தியும் சேர்ந்து கொள்ள விசாரணை ஆரம்பித்தது.... "ஆமாம் பாரத்... நேத்து உனக்கென்ன நிஜம்மாவே நெஞ்சு வலியாடா? "

"ஆமாம் டீச்சர் ...இப்போ கூட வலிக்கற மாதிரி இருக்கு...." என்று நெஞ்சைப்பிடித்து காண்பித்தான்.. (அடப்பாவி.. அய்யோ இதை நம்பி இவர்கள் இவனை கவனிக்காமல் விட்டு விட கூடாதே..என்ற கவலை ஆரம்பித்தது.. )

"நேத்து என்ன காரியம் பண்ணீங்க... ராஸ்கல்-ஸ்..." என்று நாலு விளாசு விளாசிவிட்டு.. " அதுக்கு இவரும் உடந்தை" என்று எனக்கும் விழுந்த்து. (கடவுளே .. இன்றுமா என் முறை..) டீச்சர் மீண்டும் ஸ்கேலை உயர்த்த...என் கைகளை நடுக்கினேன் (அய்.. புது வார்த்தை..நடுங்குவது போல் நடிப்பு) டீச்சர் அந்த நடுக்கத்தை உற்று பார்க்க இன்னும் வேகமாக நடுக்கினேன். ஓரளவிற்கு அந்த டெக்னிக் வேலை செய்து அடியை குறைத்தது.

ஆனாலும் பாரத்திற்க்கு நான் எதிர்பார்த்த அளவிற்க்கு விழவில்லை.. எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டான்... கிளாஸிற்கு திரும்பிய மூவரும் அன்று முழுவதும் பேசிக்கொள்ளவேயில்லை. அதன் பிறகு ரொம்ப நாளிற்கு ஜகனை நானும் பாரத்தும் ஒதுக்கி வைத்திருந்தோம்...

வழக்கம் போல பிட் அடிக்காமலேயே பாரத் முதல் ராங்கும், ஜகன் இரண்டாம் ராங்கும், நான் ராங்க் இல்லாமலும் காலம் இழுத்துச்சென்றது....

 
சில பல வருடங்கள் கழித்து....

B1-ல் அமெரிக்க பயணம் முடிந்து, H1-ல் கிளம்ப இன்னும் 15 நாள் இருக்க.... திடீரென ஒரு மதியம்...பழைய டீச்சர்-ஸை எல்லாம் பார்த்தால் என்ன என்று தோணியது...உடனே நானும் நண்பனும் நாலைந்து நல்ல பேனா செட் வாங்கிக் கொண்டு இடம் விசாரித்து கிளம்பினோம்... வெயில் வாட்டியது...பைக்கை வெளியில் நிறுத்திவிட்டு...அங்கிருந்த ஆயாவிடம் விபரம் கூற...

 " ஒ..அப்படியா...ரொம்ப சந்தோஷம்...பெரிய டீச்சர்(ஹெச்.எம்) கருங்கல்பாளையம் போய்ட்டாங்க...இப்ப இங்க மாலதி டீச்சர்தான் ஹெச்.எம்...நொரின் டீச்சர் கூட இங்கதான் இருக்காங்க...உங்களை நல்லா ஞாபகம் இருக்கு.. " என்று கூறி சிரிக்க... எனக்கு சுத்தமாக ஞாபகம் இல்லாவிட்டாலும், புரிந்து சிரித்து கொண்டே இருபது ரூபாய் நோட்டை
கொடுத்தேன்.

ஆயா உள்ளே கூட்டிசென்று கோரஸ் சவுண்டு கேட்டுக்கொண்டிருந்த ஒரு வகுப்பினுள் நுழைய.... கோரஸ் நின்றது.. நொரின் டீச்சர் வந்தார்கள்..

"டீச்சர் - Do you remember me? "
"Wait let me guess... you are Gopi right...? Superb...Great.. How are you doing..?"

"நல்லா இருக்கேன் டீச்சர்...எப்படி ஞாபகம் வைச்சிருக்கீங்க... உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு வந்தேன்...அப்படியே...இன்னும் 10 நாள்-ல யூ.எஸ் போக போறேன்.. அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் "

"Wow thats great.. May God Bless you with all wonderful things in the world... " - அடி மனதில் இருந்து வந்த வாழ்த்து
சந்தோஷத்தை கொடுத்தது...சிறிது நேரம் பேசிவிட்டு மாலதி டீச்சர் பார்க்க ஆயாவை பார்த்தேன்..

எங்களிருவரையும் ஹெச்.எம் ரூமில் காத்திருக்க சொல்லிவிட்டு சென்றார்கள்...

சிற்து நேரத்தில், மாலதி டீச்சர் தரிசனம்.... கண்ணாடி போட்டு லேசாக கருத்து போய், மெலிந்து ஆனால், குரலில் மட்டும் அதே அதட்டல்.. " வாங்க... ஆயா சொன்னாங்க.. எப்படி இருக்கீங்க?.... என்ன சாப்பிடறீங்க...? " என்ற உபசரிப்புக்கு அன்பாக மறுத்து, தண்ணீர் மட்டும் குடித்தேன்...

"நல்லா இருக்கேன் டீச்சர்... உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு வந்தேன்..." - என்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு...தகவலை சொல்ல...

"என்ன கம்ப்யூட்டரா? அதான் ஊர்ல பத்துல ஒன்பது பேர் போறாங்களே... கம்ப்யூட்டர் இல்லாம இருந்திருந்தா சிங்கியடிச்சிருப்பீங்க.. " என ஆரம்பித்து நான் செய்தது ஒன்றும் பெரிய சாதனை கிடையாது என்ற ரீதியில்...பேசிக்கொண்டே போக எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது...உண்மையில் என்னுடைய நோக்காம்..பழைய ஆசிரியர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்தான்...அதை புரியவைக்க வேண்டுமா என்ற சந்தேகம் வந்தது...அதையும் மீறி ஒரு விதமான சங்கோஜமும்...மீறி புரியவைத்தாலும்- அது உணரப்படாமலே போகும் என உணர்ந்தேன்...அடுத்த 5 நிமிடம் பேச்சு பழைய மாணவர்கள் பற்றி..அவர்களுடனான தொடர்பு பற்றி சென்றது...எனக்கு வரும்போது இருந்த உற்சாகம்
சுத்தமாக வடிந்து காலடியில் சென்றது...கிளம்பும்போது "அப்பப்ப இங்க வந்திட்டு போங்க...சரியா.." - என்று வழியனுப்பினார்கள்...

வரும் வழியில் என் நண்பனும் என்னைப் போலவே உணர்ந்ததாக சொன்னான்...

இரவில்...மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரத்தை பார்த்து எண்ணிக்கொண்டிருந்தேன்.....அவர்கள் அப்படி
நடந்துகொள்ள என்ன காரணம்..யார் மீது அவர்களுக்கு கோபம்..? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன..? எங்கே "attitude" தவறு..? நொரின் டீச்சர்-ற்கு தோன்றியது ஏன் மாலதி டீச்சர்-ற்கு தோன்றவில்லை...? என்னுடய எதிர்பார்ப்பு தவறா? ஒவ்வொரு ஆசிரியர்களுக்கிடையும் எவ்வளவு வித்தியாசம்..? அந்த பிட் சம்பவத்தை நினைவலையில் ஓட்டி பார்த்தேன்.. அந்த சம்பவத்தினால் நான் நடத்தப்பட்ட விதம்..என்னை பிட் அடிப்பதிலிருந்து மிரள வைத்ததே தவிர...அதற்கு அடிப்படைக் காரணமான படிப்பின் மீது ஒரு பிடிப்பு வர வைக்கவில்லை...என்னை போன்ற ஆவரேஜிற்கு சற்று கீழே உள்ள களிமண்ணிற்கு படிப்பில் எந்த இடத்தில் கோளாறு என்று கண்டுபிடிக்க...ஆசிரியர்களைத் தவிர வேறு யாரால் முடியும்...? படிப்பறிவில்லா என் பெற்றோர்களால் இயலாது.. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்... பிட் அடிப்பதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராயத்தான் இப்போதுள்ள பக்குவப்பட்ட மனது சொல்கிறதே தவிர...அடித்து திருத்த முயற்ச்சிக்க அல்ல...ஒரு மாணவனை எவ்வளவுதான் அடித்தாலும் படிப்பு வராது என்பது மிக நிதர்சனம்...நானே அதற்கு வாழும் உதாரணம்....எல்லா ஆசிரியர்களாலேயும் ஒவ்வொரு மாணவனிடமும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க இந்த பாஸ்ட் புட் காலத்தில் பொறுமை இருக்குமென்று எதிர்பார்க்க முடியாதுதான்... அப்படியென்றால் என்னை போன்ற மாணவனின் கதிதான் என்ன ? எனக்கு மட்டும் எட்டாம் வகுப்பில் தங்கமணி டீச்சர் வராமல் இருந்திருந்தால்....நான் இப்படி உங்களோடு ப்ளாக்-ல் கதைத்துக் கொண்டிருக்க முடியாது.. ஈரோட்டில் எங்கேனும் நெசவு செய்து கொண்டிருந்திருப்பேன்...எதோ முதல் ரேங்க் வாங்க முடியாவிட்டாலும்... அட்லீஸ்ட் ஒவ்வொரு வகுப்பிலும் பாஸாக வைத்தது அவர்களின் ஈடுபாடுதான்...மாணவர்கள் உலகத்தில் குறைந்த பட்சம் ஐம்பது சதவீதம் சராசரிக்கும் கீழே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்...அம்மாணவர்களின் எதிர்காலம் அவர்களுக்கு வரும் ஆசிரியர்களை நம்பி மட்டுமே இருக்கிறது என்று நினைக்கும்போது..அத்தொழிலின் மீது அபரிமிதமான் ஒரு மரியாதையும்...கூடவே அதற்கு வருபவர்கள் அதை உணர்ந்து வர வேண்டுமே என்ற
பயமும் வந்தது.... ...பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு எப்போதும் பழம்பெரும் குறும்புகளை கிளறிப் பார்த்து குதூகலிக்கும் சம்பவமாக எனக்கு நிகழாததை எண்ணி நொந்து போய் அப்படியே குளிரில் தூங்கி போனேன்....


பி.கு: தலைப்பில் இருக்கும் 'அந்த' சமாச்சாரத்தை பார்த்து ஆவலாக வந்தவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்...நான் 'பிட்' அனுபவத்தைதான் அப்படி சொல்ல வந்தேன்...ஹி..ஹி..ஹி...

22 comments:

Anonymous said...

Autograph padam second part paartha irukudhunganno....

Very interesting...Keep writing..

Anonymous said...

Gopi ,

Nee Solla vantha vizhayam azhagu !
Nee Sonna vidham azhagu !
Nee kadisiya ga ketta kevi azhagu!

Aanal innum azhagu ....
onga Miss'a kettu irunthal (?) !!!

11:20 AM

Anonymous said...

woderful,,,,bit matter and beat matter is ultimate narration,,,,keep up writing,,,,

Anonymous said...

Vunudaiya 'Andhaaa' anubavamum ennudaya 'Andhaaa' anubavamum onnuthannu nenachen - Adhu thavaru!

Vunnudaya 'Andhaaa' teacherum ennudaya 'Andhaaa' teacherum onnuthanu nenachen - Adhu thavaru!

Nee padicha 'Andhaaa' palli-arayum naan padicha 'Andhaaa' palli-arayum onnuthanu nenachen - Adhu thavaru!

'Andhaaa' anubavathula teacheruku nee panna kanakum naan panna kanakkum onnunu nenachen - Adhu thavaru!

'Andhaaa' nerathula nee adichathum 'Adheee' nerathula naan aduchathum 'Adhuthannu' nenachen - Adhuvum thavaru!

motta maadiyila (ennaku theriyum nee mAAdiyila padukkala madiyila paduthuthan yuosichannu) paduka mudiyatiyum, ennoda apartment katta mAAdiyila paduthu yuochisen eaan ellame thavarunnu? 'Andhaaa' nerathulathan purunchadhu - Nee parichaikku adhichadhu BIT-tu ana naan classasukku adhichadhu CUT-tu!!!

Anonymous said...

kalakkittenga Gopi.. great and interesting narration. Orey moochula padichu mudichuttaen... Keep writing more and more!!!

-Lakshmi

Anonymous said...

enakku ennavo "antha" matterra arambichathu barath illa gopi thannu thonuthu...........

Sekar

Anonymous said...

ettavathu padikara varaikkum kootal kalithal kanukku theriyallai, ana ithana varusham kaluchum Malathy Miss Saree colour and design nyabagam irukku......


-------mithy

Anonymous said...

Dear Gopi,
This is Barathi. It is nice to see your writing. Writing again start-da? Keep it up.

Ana innum koncham short panni irukkalam. Koncham vza..vza nnu iruntha mathiri irunthathu.Nanum eluthalannu ninekiren 1. Time problem?!!! 2. Tamil typing varaathu.
"Neenga typingla state rank holder!!"

OK da keep writing..and send me mail to read.

Anonymous said...

:-) நல்ல அனுபவம்.

//எனக்கு அவனை பார்த்தது முதல் வயிற்றை பிசைந்து கொண்டிருந்த சமாச்சாரம்.. "இவன் எப்படி படிப்புல.. நம்மை(?) விட ஜாஸ்தியா? "..//

நான் மட்டும்தான் இப்படின்னு நெனச்சேன்.. உலகத்துல எல்லாருமே இப்படித்தான்னு இப்பத்தானே தெரியுது.

:-P

Anonymous said...

Adengappa!!! Responses ellam orae kavidhai mazhaiya pozhiyudhu....
Super..

Anonymous said...

Konjam neeLam jaasthi. But Good post. Keep it up

Anonymous said...

Expecting next blog..

kya hua??

Anonymous said...

நல்ல அனுபவம், எனது பள்ளிபருவத்தை ஞாபகபடுத்தினீர்கள் பிட்டில் அல்ல பிரம்ம்படியில், அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சற்று நீளம் குறைத்தால் நன்று.

Anonymous said...

good one
Prem

கொங்கு கோபி said...

Comment எழுதின Digimoods,Anonymous(அண்ணா யாருண்ணா நீங்க),Victor,Vijay,Bharathi,Lakshmi,Sekar,Mithy,Gopi - அனைவருக்கும் என் நன்றி...

Mithy-யோட comment than top class..

Bharathi-யோட comment அடுத்த ப்ளாக்-ல நிச்சயம் செயல்படுத்தறேன்..

Anonymous said...

Enna gopi mithyoda comment top classna enga commentlaam enna waste classa....

enna avangaluku mattum paarapatcham....
:-(((

கொங்கு கோபி said...

சிவமுருகன்...வந்தமைக்கு நன்றி..அடுத்த முறை கண்டிப்பாக நீளத்தை குறைக்கிறேன்..( எல்லாரும் இதையே சொல்கிறார்கள்..)

Anonymous said...

dei romba santosama irukku da..nalla muyarchi...but real life la 100% gandhi maathiri iruppathu konjam kastam thaan....but adarkana muyarchi edupathe follow pannuvatharku samam da....I really appreciate your thoughts.....

anbudan
anna

Anonymous said...

நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள், மனது விட்டு சிரித்தேன். சிரிக்கவைக்க எழுதுவது பெரும் சேவை. அது எல்லாருக்கும் வராது. உங்களுக்கு அழகாக வருகிறது.நீளம் கவலையில்லை சுவையானால் .

Chandru said...

ரொம்ப நல்லா இருந்துச்சு... நானும் ஈரோடு தான்...

Anonymous said...

Great post, I enjoyed it. Keep writing..

Sri

Aarthi said...

great work gopi..i enjoyed reading it..neenga ithai lunch timela solli iruntha eppdi irukkumnu imagine panni paathukuten padichen..